நிபுணர் குழு அறிக்கையை எதிர்கொள்ள புது வியூகம்: தூதுவர்களை அழைத்து கொழும்பு ஆலோசனை |
ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட போர்க்குற்ற அறிக்கையை எதிர்கொள்ள இலங்கை அரசு புதிய வியூகங்களை இராஜதந்திர மட்டத்தில் தீவிரப்படுத்தி உள்ளது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அது கடந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று ஐ.நாவின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தார். ஆனால், இலங்கை அரசு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு அறிக்கையை வெளியிடுவதை தள்ளிப் போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அறிக்கை அனேகமாக நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது. ரஷ்யாவுக்குச் சென்றுள்ள பான் கீ மூனும் அதற்கிடையில் நியூயோர்க் திரும்பி விடுவார். அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதற்கு இலங்கை அரசு நால்வர் கொண்ட குழு ஒன்றை நியமித்திருந்தது. எனினும் அந்தக் குழு தனது பதிலறிக்கையை இன்னமும் தயார்ப்படுத்தவில்லை. இதற்கிடையே, பான் கீ மூனுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பில், அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று பீரிஸ் வலியுறுத்துவார் என்று வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பீரிஸ் பான் கீ மூன் சந்திப்பு நடக்காமல் போனால் அல்லது தோல்வியில் முடிவடைந்தால் நிபுணர் குழுவின் 196 பக்க அறிக்கை நாளை வெளியாகும் என்று கொழும்பில் அதிகாரிகள் கூறினர். அதேவேளை, அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிகழ்ந்து, அறிக்கையை பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டால் அல்லது அதில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டால் நிபுணர் குழுவின் அறிக்கை, ஐ.நாவின் சட்டபூர்வ ஆவணமாகிவிடும். இதனைத் தடுத்து நிறுத்தி, அறிக்கை பாதுகாப்புச் சபையில் அல்லது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் அரசு அதிதீவிர கவனம் செலுத்துகிறது. இதற்காக மேற்குநாடுகளில் உள்ள தனது தூதுவர்களை உடனடியாகக் கொழும்பு வருமாறு அழைத்துள்ளது. ஐ.நாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்குலகில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் நேற்று முதல் கொழும்பு வருகை தந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இன்று வந்து சேர்ந்துவிடுவர். நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நேரடியாகப் பதில் அளிக்காது வெளிநாடுகளில் உள்ள தூதுவர்கள் மூலமாக காய்களை நகர்த்த கொழும்பு விரும்புகின்றது என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. |
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment