Saturday, June 4, 2011

[கனடா தமிழ் Canada Tamil] ஈழம்.. கொடூரமும் கொலையும்!

ஈழம்.. கொடூரமும் கொலையும்!


லங்கைப் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. போர் சூழலில் பல்வேறு அவலங்களையும் கொடுமைகளையும் சந்தித்தவர்களை, இப்போதும் சிங்கள ராணுவமும், துணை ராணுவப் படைகளும் கொடுமைப்படுத்துகின்றன. இதை உடனடியாக தடுப்பது இலங்கை அரசின் முக்கியக் கடமை. 

போரினால் பொதுமக்கள் விட்டுச்சென்ற பொருட்​களையும், பணம், நகை போன்றவையையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது. அவற்றை உரியவர்களிடமோ அல்லது அவர்களின் குடும்பத்தினரிடமோ உடனே ஒப்படைக்க வேண்டும்.

இறுதிக் கட்ட போரும், அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட முகாம்களும், தமிழர்​களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்​பட்டு காணாமல் போனவர்கள் எண்ணற்றவர்கள். அங்கு விசார​ணை என்ற பெயரில் நடந்த கொடூரங்களுக்கு அளவே இல்லை. இதனால் விசாரணையைச் சந்தித்த பலர், மனது அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஏவுகணைத் தாக்குதல், வான்வழி ரசாயன குண்டு வீச்சு, பீரங்கித் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு எனப் பல முனைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், உயிருக்குப் பயந்து தப்பி ஓடியவர்கள் உற்றார் உறவினர்களைப் பிரிந்துவிட்டனர். பெற்றோரின் விரலைப் பிடித்தபடி அச்சத்துடன் குழந்தைகளும் ஓடின. ஆனாலும், விமானம் மூலம் வீசப்பட்ட குண்டுகள் வெடித்து பெற்றோர் பலியாகிவிட, கண் முன்பாக நடந்த சோகத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் பச்சிளம் குழந்தைகள் திணறித் தவித்தன. அநாதையான அந்தக் குழந்தைகளின் மனநிலை சிதைக்கப்பட்டது. அத்துடன், சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்குப் பலியான பெண்களும், சிறுமிகளும் மன நோயாளிகளாகவே மாறிவிட்டனர். போர்க் கொடுமையால் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக வாழும் இத்தகைய நபர்களுக்கு, மனநல ஆலோசனைகள் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

போர்க் காலத்தில் அப்பாவி மக்கள், சொந்த வீட்டையும் வளம் கொழிக்கும் நிலங்களையும் கைவிட்டுவிட்டு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். தற்போது போர் முடிந்த பிறகும், பொதுமக்களில் பலரை சொந்த இடத்துக்குப் போக விடாமல் சிங்கள ராணுவம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவர்களைச் சொந்த இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதோடு, அவர்கள் விரும்பும் வகையில் மறுவாழ்வை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை அரசு உதவ வேண்டும்.

தொலைநோக்குத் திட்டம்!

இலங்கையில் நடந்த போரால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உடனடி​யாக உதவிகள் செய்வது அவசியம். அதைவிட, இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் தொலைநோக்குக் கொண்ட தீர்வுக்கு வழி காண வேண்டும்.

இதற்காக பொதுமக்கள் பங்களிப்புடன் ஒரு குழுவை அமைத்து நேர்மையான முறையில் ஆய்வு மேற்கொள்வது அவசியம். 'போருக்கு அடிப்படைக் காரணம் என்ன? இரு தரப்பு மக்களிடையே நிலவும் சமூக, கலாசாரப் பிரச்னையைத் தீர்க்கும் வழி என்ன?' என்பதுபற்றி ஆராய வேண்டும்.

இறுதிக் கட்ட போரின்போது நடந்த குற்றங்கள்,அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றஉரிமை மீறல்களை இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்த தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே, கொடுமைகளை அனுபவித்த அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பை இலங்கை அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்.

தவிர, இறுதிப் போரில் பெண்கள், குழந்தைகள் போன்றோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்ய முடியாதது. அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். குறுகிய காலத்தில் குழந்தைகள், பெண்கள் தங்களுடைய பாதிப்பில் இருந்து மீள முடியாது என்பதால், அவர்களுக்கான உதவிகளை தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு!

விசாரணை தேவை!

2009 மே மாதத்தில் நடந்த இறுதிக் கட்ட போரிலும், அதற்குப் பின்னரும் சிங்கள ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருக்கிறது. குறிப்பாக வன்னிப் பகுதியில் நடந்த பல சம்பவங்களுக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே, இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா சார்பில் சர்வதேச பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.

'போர்க் காலத்திலும், அதற்குப் பின்னரும் இலங்கையில் மனித நேயத்தைக் காக்கவும், மனித உரிமையைப் பாதுகாக்கவும் ஐ.நா அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? போர்ச் சூழலில், சர்வதேச விதிமுறைகளைக் கடைபிடிக்கும்படி இலங்கை அரசு வலியுறுத்தப்பட்டதா?' - இந்த முக்கியமான அம்சங்கள் குறித்து ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஃபான் கீ மூன் ஆய்வு நடத்த வேண்டும்.

நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கிறோம். எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஐ.நா பொதுச் செயலாளருக்கு சில பரிந்துரைகளையும் கொடுத்து உள்ளோம். இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுமானால் இலங்கையில் நீதி, நியாயம், அமைதி நிலவ வாய்ப்பு ஏற்படும்!

ஈழத்தில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அமைத்த விசாரணைக் குழு அறிக்கையின் சாராம்சம் இதுதான். இதை மையப்படுத்தி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே மீது விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நீதி வெல்லட்டும்

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment