''இன்னும் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் ஏன் வைத்திருக்கிறீர்கள்?'' - இரக்கம் தோய்ந்த வார்த்தைகளால் கொழும்பு நிருபர் ஒருவர் கேட்டார்!
''முகாமில் இருக்கும் மக்களை விலங்குகள் கடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!'' - இந்தத் திமிரான பதில் ஆளும்கட்சி எம்.பி. அப்துல் காதர் தந்தது!
''இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் குடியிருந்த இடத்துக்கு மாற்றாமல் இழுத்து அடிக்கிறதே அரசாங்கம்?'' - இப்படி ஒரு கேள்வி விழுந்தது. இலங்கையின் பிரதான அரசியல் அமைப்புகளில் ஒன்றான ஜாதிஹல உறுமய அமைப்பின் மாநாடு இதே வார்த்தைகளை மாற்றித் தீர்மானம் போட்டது. 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து போர்ச் சூழல் காரணமாக, ஒரு லட்சத்து 65 ஆயிரம் சிங்களவர்கள் தென் இலங்கைக்கு வந்தார்கள். அவர்களை முதலில் வட, கிழக்கு மாகாணங்களில் குடியேற்ற வேண்டும்!' என்றது தெனாவட்டாக!
''எங்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். யாரும் அதற்கு ஞானோபதேசம் செய்ய வேண்டியது இல்லை!'' என்கிறார்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவும் அவரது தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷேவும்.
சென்னைக் கடற்கரையில் நின்று, ''இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வலியுறுத்துவோம்!' என்று சோனியா சொன்னதுபற்றி அங்குள்ள அமைச்சர் லஷ்மண் யாப்பாவிடம் கேட்டார்கள். ''அப்படியா சொன்னார் சோனியா? எங்களிடம் அப்படிச் சொல்லவே இல்லையே!'' என்று கிண்டல் அடித்தவர், ''இன்னும் விளக்கமான பதில் வேண்டுமானால், சோனியாவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்!'' என்று சிரித்தார்.
வீடும் வாசலும், மண்ணும் மக்களும், ஊரும் உறவும் இழந்து, நெஞ்சில் துளி உயிரும் சுவாசிக்கக் கொஞ்சம் காற்றும் தவிர, கையிருப்பு எதுவும் இல்லாத தமிழ் ஈழத்து மக்களை, இலங்கை அரசாங்கம் எப்படி மதிக்கிறது என்பதற்கான வாக்குமூலங்கள்தான் இவை. இவர்கள் அந்த மக்களை எப்படி நடத்துவார்கள் என்பது, இதைப் பார்த்தாலே தெரியும்!
நிராயுதபாணியான சொந்த தேசத்து மக்களை ஒரே இடத்துக்கு அழைத்து வந்து, கொட்டடியில் போட்டுப் பூட்டிய கொடுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் தொடங்கியது. 'பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான போர்' என்று சொல்லப்பட்ட அந்த யுத்தம் முடிந்த பிறகு, சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் இந்த திறந்த வெளிச் சிறையில் சிக்கவைக்கப்பட்டார்கள். 'ஆயுதம் அற்ற இந்த மனிதர்களை ஊருக்குள் விட்டால் என்ன?' என்றபோது, 'இதுவரை பயங்கரவாதிகளைக் காப்பாற்றியவர்கள் இவர்கள்தான். எனவே, இவர்களும் குற்றவாளிகள்தான்!' என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே சொன்னார்.
குற்றவாளிகளாக அடைக்கப்படும் கைதிகளுக்குக்கூட உலகத்தில் வேளாவேளைக்கு உணவும், தங்க ஒழுங்கான இடமும் உண்டு. ஆனால், இவர்கள் அனைவரையும் கைதிகளைவிடக் கேவலமாக நடத்தினார்கள். காயம்பட்டவர்களுக்கு மருந்து தராமலும், மற்றவர்களைப் பட்டினி போட்டும் கொல்லும் நவீனக் கொலை பாதகம் சத்தம் இல்லாமல் அரங்கேறியது. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்ச மாகத் தமிழர்களை வெளியில் விட ஆரம்பித்தார்கள். விட்டால் போதும் என்று வெளியேறிய தமிழர்கள், தங்களது சொந்த வீடுகளைத் தேடிப் போனபோது சோகம் இன்னும் அதிகமானது.
தமிழர்கள் தங்கி இருந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டும், கதவு, ஜன்னல் மற்றும் நிலைகள் பெயர்க்கப்பட்டும், மேல் தளம் தகர்க்கப்பட்டும் மொட்டைச் சுவர்களாக மட்டுமே இருந்து தமிழர்களை வரவேற்றன. விவசாயம் பார்த்தவனுக்கு அவனது நிலங்கள் தெரியவில்லை. அவை வேறு யாருக்கோ ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிளாட் போடப்பட்டு விட்டன. மீன்பிடித் தொழில் பார்த்தவர் களுக்கு கடற்கரை ஓரங்களில் கால் வைக்கவே அனுமதி இல்லை. மேலும் படகுகள், வலை கள் என எதுவும் இல்லை. கையில் வைத்திருக்கும் சொற்பப் பணம் சாப்பாட்டுக்கே போதாது. படகுகள் எங்கே வாங்குவது? இதற்கு முள்வேலி முகாமே நல்லதோ என்று நினைக்க ஆரம்பித்தான் தமிழன். 'மரத்தில் இருந்து கீழே விழுந்து கால் ஒடிந்தவனை, மாடு ஏறி மிதித்தது மாதிரி இருக்கிறது தமிழனின் நிலைமை!' என்று வீரகேசரி பத்திரிகை வர்ணிக்கிறது.
இலங்கை அரசாங்கம் அமைத்த முகாம் களில் தங்கி இருந்த தமிழர்களுக்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனமும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொண்டு அமைப்புகளும்தான் உணவு, குடிநீர் வசதியைச் செய்து கொடுத்தன. இலங்கையில் நடந்த கொடூரத்தை உணர்ந்த பல்வேறு அமைப்புகள் பணத்தைக் கொடுத்தன. அதை இந்த அமைப்புகள் ஓரளவு முறையாகச் செலவும் செய்தன. இது அரசாங்கத்தின் கண்களை உறுத்த ஆரம்பித்தது. உடனே, 'இப்படி வரும் பணத்தை நேரடியாக இந்த நிறுவனங்கள் செலவு செய்யக் கூடாது. அரசாங்கத்தின் வழியாகத்தான் செலவு செய்ய வேண்டும்' என்று முதல் தடையைப் போட்டார்கள். இவர்கள் வழங்கும் பொருட் களில் அரசு முத்திரை வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். அப்படி வந்த நிதியை உடனடியாக ஒதுக்குவதில் தயக்கம் காட்டினார்கள். இதனால், ஏகத்துக்கும் திண்டாட்டம் ஆனது. ஒரு ஆளுக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, தொண்டு நிறுவனங்கள் அளித்து வந்தன. பணம் கிடைக்காததால், தண்ணீரின் அளவை 5 லிட்டர் ஆக்கினார் கள். அதன் பிறகு, தண்ணீரே வழங்கப் படவில்லை. இத்தனைக்கும் தண்ணீரை அரசு நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கினார்கள்.
வன்னியில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் வந்து சேர வில்லை. இதைப்பற்றி எல்லாம் அமைச்சர் பசில் ராஜபக்ஷேவிடம் கேட்டபோது, 'இனிமேல், இம்மாதிரியான தொண்டு நிறுவனங்கள் எங்கள் நாட்டுக்குத் தேவையே இல்லை!' என்று மொத்தமாகக் கதவை மூடினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் முகமாக இலங்கை அரசாங்கம் இரண்டு முக்கியமான அமைச்சகங்களை அமைத்தது. 'புனர் வாழ்வு அமைச்சு' என்பது முதலாவது. 'மீள் குடியேற்ற அமைச்சு' என்பது இரண்டாவது. இந்த இரண்டு அமைச்சகங்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் செயல்பட வேண்டும். ஆனால், இன்று வரை இந்த அமைச்சகங்களின் அலுவலகங்கள்கூட அங்கு அமைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் தூதரகத்தை அமைத்துவிட்டதாக முதல்வர் கருணாநிதிக்குப் பெருமிதம் பொங்கக் கடிதம் எழுதினார், நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.
30 ஆண்டு காலச் சண்டையும் மோதலும் இதற்காகவா நடந்தது? உயிர் இழந்தவர், உடல் உறுப்பு இழந்தவர், சொத்தை இழந்தவர், தொழில் மற்றும் வருவாய் இழப்பு அடைந்தவர் கள், மீள் குடியேற்றம் நடந்துள்ளதா இல்லையா... என்பது போன்ற தகவல்களை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வுக்கு, அதைப்பற்றிக் கவலையே இல்லை. இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பெற இந்தியாவுக்கு உரிமை இருக்கிறது. மறைமுகமான ராணுவ உதவிகளை மட்டுமல்ல... வெளிப்படையான பண உதவிகளும் இந்தியர்களின் வரிப் பணத்தில் இருந்து செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிஷப் டாக்டர் ராயப்பு ஜோசப் அளித்துள்ள அறிக்கையைப் படித்தால் மனம் பதறுகிறது. '2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வன்னி மற்றும் முல்லைத் தீவுப் பகுதி மக்கள் தொகை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59. ஆனால், இப்போது அரசு வசம் இருப்போர் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர் மட்டும்தான். அப்படியானால் 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் என்ன ஆனார்கள்?' என்று கேள்வி கேட்கிறார். இதற்கு யார் பதில் சொல்வது?
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி மாணிக்கம் பண்ணை 0 மற்றும் 1 முகாம்களில் மட்டும் 17 ஆயிரத்து 528 பேர் முள்வேலிகளுக்குள் இன்னமும் இருக் கிறார்கள். ஏதாவது கிடைத்தால் சாப்பிடுவார்கள். யாராவது கேட்டால், பேசுவார்கள். மற்றபடி கையது கொண்டு மெய்யது பொத்தி... வாழ்க்கை தொடர்கிறது. மரண நாள் குறிக்கப்பட்ட பெரியவர்கள், யாருமற்ற மூதாட்டிகள், உடல் உறுப்புகளை இழந்த ஆண்கள், போர்க் காயங்கள் ஆறாத பெண்கள், உடல் வற்றிப்போய் எலும்பைத் தோலால் மூடி இருக்கும் குழந்தைகள்... என்று இவர்களை வகைப்படுத்தி இருக்கிறது ஒரு தொண்டு நிறுவனம்.
இளம் பெண்கள் மட்டுமே இன்று அவர்கள் விரும்பும் பண்டமாக இருக்கிறது. சிங்களக் கரு தாங்கிய தமிழ்த் தாய் மடிகளாய் அவை மாறி, ஈழக் கனவை இப்படியும் சிதைக்கலாம் என்று காட்டப்போகிறார்களாம்!
இனி யாருக்கு வேண்டும் நாடும்... நாடு கடந்தும்?
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment