Saturday, April 23, 2011

[கனடா தமிழ் Canada Tamil] லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே? -ப.திருமாவேலன்

'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே?

ப.திருமாவேலன்

றைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது!

 ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது.

''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள்.  எனது நண்பரின் முகவரியைச் சொல்லி  விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இடத்தை அவர் சுட்டிக்காட்டினார். அங்கே போவதற்காக நான் எனது மோட்டார் சைக்கிளை உசுப்பினேன். மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெயைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தி வந்தேன் என்பதால், அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம். உள்ளுணர்வின் தூண்டுதலால் அது ஒரு குண்டு என்பதைப் புரிந்துகொண்டு நான் சடாரென்று தாவி பக்கத்தில் இருந்த குழிக்குள் விழுந்தேன். அருகில் பெரிய வெடிச் சத்தம். சில நிமிடங்கள் கழித்து தலையை உயர்த்திப் பார்த்தேன். எனக்கு வழி சொன்ன ஆளின் கால்களுக்கு இடையேதான் குண்டு விழுந்து இருந்தது. அந்த ஆளைக் காணவில்லை.  இரண்டு பெண்களும் இறந்துகிடந்தார்கள். அவரின் மனைவியின் கால்கள் இரண்டும் குண்டு வெடித்ததில் பிய்த்துக்கொண்டு போயிருந்தது. 'என்னை விட்டுவிட்டுப் போகாதே. காப்பாற்று...' என்று அந்தப் பெண்மணி என்னிடம் கெஞ்சினார். நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத்தான் விரும்பினேன். ஆனால், அருகில் மருத்துவமனை இல்லை. என்னால் முடிந்தது, அவரது உயிர் பிரியும் வரை அவர் அருகில் சிறிது நேரம் நிற்க முடிந்ததுதான்!'' என்று தொடங்குகிறார் வால்டர் வில்லியம்ஸ் என்ற இளைஞர். இந்தக் கட்டுரை எப்படி முடிகிறது என்பதையும் பார்த்தால் தான், 18 கல் தொலைவில் எப்படிப்பட்ட நாசம் நடந்தது என்பது தெரியும்.

''உயிர் வாழ்வதைப்பற்றி எவருக்குமே கவலை இல்லை. அங்கே இருந்த மருத்துவமனை செயல் படாமல் இருந்தது. மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் தாக்கலாம் என்ற நிலையில், அங்கே இருந்தவர்கள் தமது உறவினர்களோடு நெருக்கமாக இருக்க விரும்பியதைப் பார்த்தேன். சாகும்போது எல்லோரும் ஒன்றாகச் சாக வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவர்களின் ஒரே எண்ணம். போராளிகளுக்கும் எந்தவித வாய்ப்பும் இருக்கவில்லை. சண்டை போடுவது அல்லது சாவது என்ற நிலையில் அவர்கள் போரிட்டுக் கொண்டு இருந்தார்கள். அங்குதான் நான் அது வரை பார்த்திராத, இனிமேல் ஒருபோதும் பார்க்க விரும்பாத அந்தக் காட்சியைப் பார்த்தேன். பசிகொண்ட நாய்கள் சுற்றிலும் சிதறிக்கிடந்த மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கடித்துக் குதறி தங்கள் பசியை ஆற்றிக்கொண்டு இருந்தன. எங்கு பார்த்தாலும் மரணத்தின் துர் நாற்றம். சாவுப் பறை அடிப்பதுபோல குண்டுகள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. சாலை ஓரங்களில் காயம்பட்ட போராளிகள் குவியல் குவியலாகக்கிடந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை. 'யாராவது சயனைட் கொடுத்து எங்களைக் கொன்றுவிடுங்களேன்' என்று அந்தப் பெண்கள் கதறிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த இரவில் எங்காவது படுத்துத் தூங்க வேண்டும் என்று பாதுகாப்பாக ஓர் இடத்தைத் தேடினேன். ஒரு டிராக்டர் இருந்தது. அதன் கீழே போர்வை போர்த்திக்கொண்டு ஒருவர் படுத்திருப்பது தெரிந்தது. நானும் இங்கே படுத்துக்கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார். சரியென்று நான் அவர் அருகில் படுத்துக்கொண்டேன். காலை விழித்து எழுந்தபோதுதான், என் அருகில் படுத்திருந்தது மனிதர் அல்ல.... சில மணி நேரங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஒருவரின் பிணம் என்பது தெரிந்தது!'' இப்படி முடிகிறது அந்தக் கட்டுரை!

பிணங்களோடு நடைபிணங்களாய் நம் தமிழர்கள் கிடந்தார்கள். இப்போதும்  கிடக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை.

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வு குறித்து அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே பேசினாலும்... சென்னை தீவுத் திடலில் சோனியா  சொல்லிச் சென்றாலும்... செத்த தமிழனுக்கு நிவாரணமும் இல்லை. வாழும் தமிழனுக்கு வழிவகையும் காட்டப்படவில்லை.

''போரின் இறுதிக் காலகட்டத்தில் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 13,130 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த கருத்தரங்களில் தகவல் தரப்பட்டுள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட சாவுகளை 'வெறும் புள்ளிவிவரங்கள்'தான் என்பார்கள். ஆனால், முள்ளிவாய்க்கால் சோகம் உலக அரங்கில் புள்ளிவிவரங்களுக்குக்கூட பயன்படுத்த முடியாமல் கிள்ளி எறியப்பட்டது.

இதில் முதலும் கடைசியுமான நம்பிக்கையாக இருப்பது ஐக்கிய நாடுகள் சபை கொடுத்திருக்  கும் அறிக்கை! உலகம் தடை செய்த அத்தனைக் குண்டுகளையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்தி, ஓர் இனத்தின் பாதிப் பேரை அழித்தும் சிதைத்தும் முடித்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தது அந்தச் சபை. தமிழ் சினிமாவின் கடைசி நேர போலீஸாக வந்து இன்றைக்கு விசாரணையைத் தொடங்கி உள்ளது.

இந்தோனேஷிய முன்னாள் தலைமை நீதிபதி மர்ஸ¨கி தருஸ்மான், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னா ஆகிய மூவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக இருந்து, தங்களது விசாரணையைச் சட்டத்துக்கு உட்பட்டும், மனிதாபிமான நெறிமுறைகளைப் பின்பற்றியும் நடத்தி முடித்து இருக்கிறார்கள். 220 பக்கங்கள் கொண்டதாக அறிக்கை தயார். இலங்கை அரசாங்கத்தின் அத்தனை சால்ஜாப்பு விளக்கங்களையும் புறம் தள்ளி இவர்கள் தங்களின் தீர்ப்பை எழுதி உள்ளார்கள். ராஜபக்ஷே எத்தகைய தந்திர வலைகளைத் தயாரித்தாலும், இந்த விசாரணை வளையத்தில் இருந்து தப்பிப்பது இனி சிரமம்!

மகிந்த ராஜபக்ஷேவின் கண்களில் முதன் முதலாகப் பயம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்குத் தான் செய்து கொடுத்த நன்மையாக இதை உருவகப்படுத்தும் காரியங்களை அவர் பிரசாரம் செய்து வருகிறார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இடங்களை அவரது கட்சிதான் கையில் வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் மொத்தம் உள்ள 234 இடங்களில் ராஜ பக்ஷேவின் கூட்டணி 205 இடங்களைப் பிடித் தது. முக்கிய எதிர்க் கட்சியாகச் சொல்லப்படும் ஐக்கிய தேசியக் கட்சி 9 இடங்களைத்தான் பிடித்தது. அதாவது, இலங்கையில் சுதந்திரா கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்தான் சரிக்குச் சமமான பலத்துடன் இருந்தன. ஆனால், இன்று சுதந்திரா கட்சி யானையாகவும் ஐக்கிய தேசியக் கட்சி எறும்பாகவும் சுருங்கிவிட்டன. எதிர்க் கட்சித் தலைவராக கம்பீரமாக வலம் வந்த ரணில் விக்கிரமசிங்கே இருக்கும் இடமே தெரியவில்லை. எனவே, ராஜபக்ஷே வைத்தது தான் சட்டம். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது என்கிறது இலங் கையின் அரசியல் அமைப்பு. அதையே தனது பெரும்பான்மை வாக்குகளால் மாற்றிவிட்டார் மகிந்தா. 'இதன்  தொடர்ச்சியாக மேலும் சில பயங்கரங்கள் அரங்கேற இருக் கின்றன' என்கிறார்கள் கொழும்பு செய்தியாளர்கள்.

''சிங்கள இனத்தின் அசைக்க முடியாத மனிதராக உருவகப்படுத்திக்கொள்ளும் ராஜபக்ஷே, தன்னை இலங்கையின் மாமன்னராக ஆக்கும் காரியங்களை மறைமுகமாகத் தொடங்கிவிட்டார். அதாவது மக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, மன்னர் ஆட்சிக் காலம் இலங் கையில் வெகு சீக்கிரமே ஆரம் பமாக இருக்கிறது. 'லங்க ரட்ட' என்று சொல்லப்படும் மன்னர் ஆக ராஜபக்ஷேவை முடிசூட்டப்போகிறார் கள்!'' என்று  கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. சிங்கள இனத்தின் பெருமை பேசும் 'மகா வம்ச' வரலாற்றுப் புத்தகத்தைத் திருத்தி எழுதும் காரியங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி, தமிழர்களை மிகமிகச் சிறுபான்மையினர் ஆக்கவும் மறைமுகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ''இலங்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதன் ஜனநாயகத் தன்மையைப் பாதிக்கும்'' என்று அமெரிக்க அதிகாரி பி.ஜே.குரோவ்லி கொடுத்து இருக்கும் எச்சரிக்கை, தமிழர்களுக்கு மட்டும் அல்ல... சிங்களர்களுக்கே சிக்கலானதுதான்.

சமீப காலமாக பல நாடுகளில், மன்னர்கள் தான் நாட்டைவிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்!

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment